தமிழகத்தில் ஏற்கெனவே இருவரை கொரோனா தாக்கிய நிலையில், மூன்றாவதாக 21 வயது மாணவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அயர்லாந்தின் டூப்லின் நகரிலிருந்து கடந்த 17-ஆம் தேதி சென்னை வந்த 21 வயது மாணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பதாகவும், அவருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் அமைச்சர் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில், சிகிச்சைக்குப் பின் அவர் குணமடைந்துள்ளார். மேலும், டெல்லியிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்த ஒரு நபருக்கும் கொரோனா தொற்று இருந்ததால், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட மூவரும் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தீவிரமான கண்காணிப்பு காரணமாகவே அவர்கள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்துள்ள அமைச்சர், கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றார். கொரோனாவை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.