தமிழ்நாடு

கொரோனா, ஊரடங்கு தகவல்களுக்கு பிரத்யேக வலைத்தளம் - சென்னை மாநகராட்சி வெளியீடு

webteam

கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு பற்றிய அனைத்தையும் ஒரே வலைத்தளத்தில் அறிந்து கொள்ள சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.அதேசமயம் ஊரடங்கு உத்தரவினால் மக்கள் சிரமத்தைச் சந்திக்காத வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியூர் செல்ல நினைப்பவர்களுக்கு அனுமதிச் சீட்டுகளும் வழங்கப்படுகின்றன.

அத்துடன் கொரோனா வைரஸால் எந்தெந்தப் பகுதியில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பன உள்ளிட்ட தகவல்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.இந்நிலையில் அனைத்து தகவல்களை ஒரே வலைத்தளப் பக்கத்தில் மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் covid19.chennaicorporation.gov.in என்ற பிரத்யேக வலைத்தளத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் எந்த நேரத்திலும் இந்த வலைத்தளத்திற்கு சென்று நன்கொடை, தன்னார்வலர் பதிவு, அவசரக்காலப் போக்குவரத்து அனுமதிச் சீட்டு, அம்மா உணவகங்கள், பகுதிவாரி பல்பொருள் அங்காடி பட்டியல், அவசர உதவி எண்கள் போன்ற அனைத்துத் தகவல்களையும் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.