சென்னை திருவேற்காடு அருகே சுடுகாடு பூஜை எனக் கூறி 50க்கும் மேற்பட்டோரைக் கூட்டி அரசியல் பிரமுகர் நடத்திய விழா மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த திருவேற்காடு அருகேயுள்ள பருத்திப்பட்டு சுடுகாட்டினையொட்டி அரிசந்திரன் சிலை திறப்பு விழா நடைபெறுவதாகச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று மாலை அகோரிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர், மேளதாளத்துடன் சுடுகாட்டில் அரிசந்திரன் சிலையைத் திறந்தனர். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். கொரோனா பீதியில் மக்கள் இருந்து வரும் நிலையில் 50க்கும் மேற்பட்டோர் விழா நடத்திய சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
பொதுமக்கள் கூடியதை அறிந்த திருவேற்காடு காவல்துறையினர் மக்களை அப்புறப்படுத்தினர். அரசியல் பிரமுகர் ஒருவரின் ஏற்பாட்டில் இந்த விழா நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, அரிச்சந்திரன் சிலை திறப்புவிழா தொடர்பாக வேலப்பன்சாவடியை சேர்ந்த பாபு என்பவர் பூவிருந்தவல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனக்குச் சொந்தமான நிலத்தில் அதிமுக பிரமுகர் அகோரிகளை வைத்து பூஜை நடத்துவதாகத் தெரிவித்திருந்தார். சம்பவ இடத்திற்கு வந்த பூவிருந்தவல்லி வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறையினர். உடனடியாக விழாவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
பாபு கூறுகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அதிமுக வட்ட செயலாளர் சங்கர் தன்னிடம் மாமூல் கேட்டதாகவும், அதனைத் தர மறுத்ததால் வேண்டும் என்றே தன்னுடைய இடத்தில் அகோரிகளை வைத்து சடங்கு செய்ததாகவும் குற்றம்சாட்டினார். எனவே தனது சொந்த நிலத்தை மீட்டுத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து அனுமதியின்றி வைக்கப்பட்ட அரிச்சந்திரன் சிலையை பூவிருந்தவல்லி வட்டாட்சியர் காந்திமதி தலைமையிலான வருவாய்த் துறையினர் அகற்றினர். மேலும் நில உரிமையாளருக்கு நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுத்தனர்.