தமிழகத்தில் இதுவரை 17 வயது முதல் 60 வயதுக்குப்பட்டோர் 47 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வருகிறது.
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,152 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 7வது நாளாக இன்றும் ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 633 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 16,395 உயர்ந்துள்ளது. இன்று மட்டும் ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்தம் 251 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 7வது முறையாக உயிரிழப்பு இரட்டை விகிதத்தில் பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,146 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தொற்று ஏற்படாமல் கவனமுடன் இருக்க வேண்டுமென மத்திய மாநில சுகாதாரத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுவரை தமிழகத்திலும் சரி, நாடு முழுவதிலும் ஏன் உலகமெங்கிலும் கூட குழந்தைகள் கொரோனா தொற்று ஏற்பட்டால் எவ்வித பிரச்சினையும் இன்றி குணமடைந்து வருகின்றனர். ஆனால் , ஏற்கெனவே பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் பெருமளவில் பாதிப்புகளுடன் இருக்கும் முதியோரின் நிலை அரசுகள் கூறுவதைப் போலவே கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால் இரண்டிற்கும் இடைப்பட்ட அதாவது 20 - 60 வயதிற்குப்பட்டவர்களின் நிலை நாளுக்கு நாள் கவலையை ஏற்படுத்தி வருவதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் கணிக்கின்றனர். தமிழக சுகாதாரத்துறை இதுவரை வழங்கியுள்ள செய்திக்குறிப்பின் அடிப்படையில் பார்க்கும் போது ஜூன் 6 ஆம் தேதி வரை 251 உயிர்கள் கொரோனா வைரஸ் தொற்றிற்குப் பலியாகியுள்ளன. இவற்றில் 47 பேர் 17 முதல் 60 வயதிற்குப்பட்டவர்கள். அதிலும் குறிப்பாக 20- 60 வயது வரையிலான உயிரிழப்புகளில் 35 பேர் நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் , சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பிற நோய்களால் பாதிக்கப்படாதவர்கள் என்று கூறுகின்றனர் சுகாதாரத்துறை நிபுணர்கள்.
60 வயதிற்குட்பட்ட இம்மரணங்களின் எண்ணிக்கை தான் கொரோனா தொற்றின் தன்மையையும், தீவிரத்தையும் உணர்த்துவதாக உள்ளது. முதியவர்கள் மட்டுமல்ல. அனைத்து தரப்பினரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையே இம்மரணங்கள் எச்சரிக்கை செய்வதாக இருக்கிறது.