தமிழ்நாடு

குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் கொரோனா சிகிச்சை மருத்துவக்கழிவுகள் : அச்சத்தில் மக்கள்

webteam

பூந்தமல்லி அருகே கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவக்கழிவுகளை குடியிருப்பு பகுதியில் கொட்டியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சென்னை அருகேயுள்ள திருவேற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் மையங்கள் இயங்கி வருகின்றன. அங்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள் பூவிருந்தவல்லி அருகேயுள்ள சென்னீர்குப்பத்தில் கொட்டப்பட்டு வருவதாக, அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அந்த குப்பைகளை அள்ளும் தூய்மை பணியாளர்கள், செந்நீர் குப்பம் குடியிருப்பு பகுதியில் அவற்றை கொண்டு வந்து தரம் பிரிக்கின்றனர்.

இதனால் அங்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை பூவிருந்தவல்லி வட்டார அலுவலகத்தில் புகார் அளித்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கிடையே செந்நீர்குப்பம் பகுதியில் 20க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே கூடுதல் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. இதுதொடர்பாக பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டபோது, குப்பைகளை அகற்றி மருத்துவ கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.