டெல்லி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் கொரோனா முதல் கட்ட பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லி நிஜாமுதீனில் மார்ச் முதல் வாரம் நடைபெற்ற ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களில், தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக சுகாதார துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் 1500 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 981 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், அந்த மாநாட்டில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது. அவர்களை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 13 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் முதல் கட்ட பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அனைவரும் தனிமைப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.