தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் நாளை ஒரு லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பு முகாம்!

ச. முத்துகிருஷ்ணன்

தமிழகம் முழுவதும் நாளை ஒரு லட்சம் இடங்களில் 31-வது கொரோனா சிறப்பு தடுப்பு முகாம் நடைபெறுகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகளை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்த சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. இதில் இரண்டாம் தவணை, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த மே 8-ந்தேதி கடந்த ஜூன் 12-ந்தேதி தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இந்த நிலையில் 31-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் நாளை நடைபெற உள்ளது. நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 31-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் இதுவரை சுமார் 11.45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், குறிப்பிட்ட காலத்தில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்தும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என சுமார் 1.45 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர்.

தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்த தவறியவர்கள் தவணை தடுப்பூசியை குறித்த காலத்தில் உள்ளாக செலுத்தாமல் விடுபட்டவர்கள் என அனைவரையும் கண்டறிந்து மாவட்ட வாரியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரபடுத்த சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போதைய நிலையில் 78.78 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென சுகாதாரத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.