தமிழ்நாடு

அதிகரிக்கும் கொரோனா: இணை நோய்கள், கோவிட் தொற்றால் உயரும் வயது முதிர்ந்தோர் உயிரிழப்புகள்

சங்கீதா

தமிழகத்தில் 4-ம் அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை 2700-க்கும் மேல் உயர்ந்துள்ளது. எனவே தொற்றுடன் தனிமைப்படுத்தலில் இருப்போர் எண்ணிக்கையும் 19,000 ஐ நெருங்கியுள்ளது.

பரவல் அதிகரிக்க அதிகரிக்க, கடந்த 3 மாதங்களாக இல்லாமல் இருந்த கோவிட் உயிரிழப்பு மீண்டும் ஏற்படத் தொடங்கியுள்ளது. மார்ச் 10-ம் தேதிக்குப் பிறகு, கடந்த ஜூன் 14-ம் தேதி தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட இளம்பெண், அதே நாளில் கோவிட் தொற்றால் உயிரிழந்தார். இவர் எவ்வித இணைநோய்களும் இன்றி கோவிட் தொற்றுக்கு பலியானார். ஜூன் மாதத்தில் ஏற்பட்ட ஒரே ஒரு கோவிட் உயிரிழப்பு தமிழகத்தில் இதுவாகும்.

இதைத் தொடர்ந்து இந்த ஜூலை தொடங்கிய ஒரே வாரத்தில் இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஜூன் 5-ம் தேதி 77 வயது மூதாட்டி நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுடன் கோவிட் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார். ஏற்கனவே 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் இன்று நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகிய இணைநோய்களுடன் கோவிட் தொற்றும் பாதித்த 80 வயது முதியவர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதவிர, சென்னையில் 45 பேர் உட்பட கோவிட் நோயாளிகள் 75 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 31,707 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஆண்கள் 1,563 பேரும், பெண்கள் 1,202 பேரும் என மொத்தம் 2,765 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1011 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 93,599 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 18,378 ஆக உள்ளது.இதுவரை 34 லட்சத்து 37,193 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 2,103 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்.