தமிழ்நாடு

கொரோனா கால மகத்துவர்: நோயாளிகளுக்கு 2.5 டன் வாழைப்பழங்களை வழங்கிய விவசாயி

கொரோனா கால மகத்துவர்: நோயாளிகளுக்கு 2.5 டன் வாழைப்பழங்களை வழங்கிய விவசாயி

kaleelrahman

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்காக இரண்டரை டன் வாழைப்பழங்களை விவசாயி அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடி உள்ள நிலையில், வாழை விவசாயிகள் வாழைப்பழத்தை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். வாழைத் தோப்பில் வீணாகும் நிலையில் இருந்த வாழை தார்களை, பயனுள்ள வகையில் நோயாளிகளுக்கு கொடுக்கலாம் என முடிவுசெய்து தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டத்தை சேர்ந்த வாழை விவசாயி மதியழகன் கடந்த ஆண்டு இரண்டு டன் வாழைப்பழங்களை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கினார்.

அதேபோல இந்த ஆண்டும் தனது விளைந்த இரண்டரை டன் வாழைப்பழங்களை சொந்த செலவில் வெட்டி வாகனத்தில் எடுத்துவந்து நோயாளிகளுக்கு வழங்குவதற்காக தோட்டக் கலைத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். பலரும் பல வகையில் நோயாளிகளுக்கும், கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் உதவிவரும் நிலையில், வாழைப்பழம் தான் நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் என 55 ஆயிரம் பூவன் வாழைப்பழத்தை வழங்கியுள்ளதாகவும், அடுத்த வாரம் மீண்டும் வாழைப்பழம் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.