தமிழ்நாடு

“மருத்துவர்களின் உடலுக்கு எதிர்ப்பா..? இரும்புக் கரத்தால் அடக்குங்கள்” - மருத்துவர் சங்கம்

webteam

மக்களுக்காக கொரோனாவிடம் போராடி உயிர் தியாகம் செய்யும் மருத்துவர்களின் உடலை அரசு மரியாதையுடன் அடக்க செய்ய வேண்டும் என அரசு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

உலகையே கொரோனா வைரஸ் நடுங்க வைத்துள்ளது. அனைத்து நாடுகளும் கொரோனாவால் முடங்கியுள்ள நிலையில், அதனை எதிர்த்து போரிடும் களத்தில் முன்னே நிற்பவர்கள் மருத்துவர்கள் தான். அனைவரும் ஊரடங்கால் தங்கள் குடும்பத்துடன் இருக்கும்போது, ஊருக்காக குடும்பத்தைவிட்டு கொரோனாவிடம் உயிரை பணயம் வைத்திருப்பது மருத்துவர்கள் தான். இவர்கள் கொரோனாவிற்கு எதிராக போராடி தங்கள் உயிரையும் தியாகம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்றுகூட ஒரு மருத்துவர் கொரோனா வைரஸால் இறந்துள்ளார். ஆனால் மக்களுக்காக உயிர்தியாகம் செய்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்களே அனுமதிக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய தடுப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரும்பாடுபட்டு தன்னுயிரை இழக்கின்ற மருத்துவர்களின் இறுதிசடங்கில் அநாகரிகமாக நடந்திடும் சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்து குண்டர்சட்டத்தில் அடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 கொரோனா பாதிப்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் இறக்க நேரிட்டால் காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை உயர்அதிகாரிகள் தலைமையில் அரசு உரிய மரியாதையுடன் அடக்கம் செய்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் இருக்க அரசு டாக்டர்களின் கூட்டமைப்பு மருத்துவர்களின் சார்பாக வேண்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.