மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் உள்ளவர்கள், ஆதரவற்றோர், முன்களப்பணியாளர்கள் என நாள்தோறும் சுமார் 800 பேருக்கு 3 வேளை உணவு வழங்கி பசிபோக்கி வருகிறார்கள் இளைஞர்களும், இளம்பெண்களும்.
கொரோனா பெருந்தொற்று பலரின் வாழ்வாதாரங்களை பறித்துக்கொண்டு பட்டினியில் தள்ளியிருக்கிறது. அப்படி மதுரையில் பசியோடு இருப்பவர்களை தேடிச்சென்று உணவு அளித்து வருகிறார்கள் 7 பேர் கொண்ட இளைஞர்கள் குழு. மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த டுகாத்தி, தனது உறவினர் மகாலட்சுமி மற்றும் சக நண்பர்களுடன் இணைந்து தினசரி 800 பேருக்கு உணவு அளித்து வருகிறார். ஆதரவற்றோர், முன்களப்பணியாளர்கள், சாலையோரம் வசிப்பவர்கள், கொரோனா பாதிப்பால் வீட்டுத்தனிமையில் இருப்பவர்கள் என தேடிச்சென்று இக்குழுவினர் உணவு அளித்து வருகிறார்கள். இந்த சேவைக்காக மடிக்கணினி வாங்க வைத்திருந்த பணத்தை கொடுத்துள்ளார் மகாலட்சுமி.
இக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும், சுமார் 100 கிலோமீட்டர் வரை பயணித்து உணவு அளிக்கிறார்கள். 3 வேளையும் இருசக்கர வாகனத்தில் பயணம் சென்றபடியே இருப்பதால் ஏற்படும் உடல்சோர்வு, பலரது பசியை ஆற்றும்போது ஏற்படும் மனநிறைவால் காணாமல் போய்விடுகின்றது எனக் இக்குழுவினர் கூறுகின்றனர்.
உணவுப்பொட்டலங்களை இவர்களின் அறக்கட்டளை அலுவலகத்துக்கே வந்து வாங்கிச் செல்வோரும் இருக்கிறார்கள். இதுதவிர நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க, சுண்டல், பயறு வகைகள், காய்கறிகள், வாரத்துக்கு 4 முட்டைகள் என இவர்கள் வழங்குகிறார்கள். கொரோனா முதல் அலையில் இருந்தே இரவு உணவு மட்டும் அளித்துவந்த இந்த இளைஞர் பட்டாளம், 2 ஆம் அலையில் சுமார் 800 பேருக்கு 3 வேளை உணவு என தங்கள் சேவையை விரிவுபடுத்தி பலரது அன்பையும், வரவேற்பையும் பெற்று வருகிறார்கள்.