தமிழ்நாடு

கொரோனா பொது முடக்கம்: மீன் வாங்க காசிமேடு துறைமுகத்தில் குவிந்த மக்கள்

kaleelrahman

நாளை முதல் முழு ஊரடங்கு காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க பொது மக்கள் சமூக இடைவெளி கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.

வேகமாக பரவி வரும் கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக ஏற்கெனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்த நிலையில் நோய்த்தொற்றின் தீவிரத்தால் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை காசிமேட்டில் மீன் வாங்குவதற்காக பொது குவிந்து வருகின்றனர். அதேபோல, காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொது மக்கள் அதிகாலை முதலே அத்தியாவசிய பொருட்களை வாங்க குவிந்த வண்ணம் உள்ளனர். ஊரடங்கு நேரத்தில் கடைகள் திறக்கப்படாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் பொது மக்கள், காய்கறி, மீன் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்காக வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், காலடிபேட்டை மற்றும் தேரடி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளியின்றி அதிக அளவில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

வியாபாரிகளும், காவல்துறையினரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கக் கூறி பல்வேறு எச்சரிக்கைகள் விடுத்தும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதில் மட்டும் அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர். ஊரடங்கு அறிவித்து நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பொது முடக்கத்தை அறிவித்துள்ள நிலையில் இது போன்று பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் கூடுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாகம் இதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.