தமிழ்நாடு

காஞ்சிபுரம்: 40 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

webteam

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில் தற்போது வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30,031 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 286 பேர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் அடுத்த பொண்ணேரிக்கரை பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் நோய்த் தொற்றுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அங்கு பயின்று வந்த 1818 கல்லூரி மாணவர்களில் 900க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் அவர்களோடு தொடர்பில் இருந்த மாணவர்களை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தற்போது வரை 40 மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு அதே மருத்துவக் கல்லூரியில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை 83 சிறப்பு மருத்துவ முகாம் இன்றிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது.