கோவையில் 3 காவலருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தகவல் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. அரசு பிறப்பித்திருக்கும் ஊரடங்கு நிலைமையை கடுமையாக அல்லும் பகலும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் 3 காவலருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தகவல் தெரிவித்துள்ளார். போத்தனூரை சேர்ந்த இரண்டு பெண் காவலர்கள் மற்றும் ஒரு ஒரு ஆண் காவலர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த 3 காவலர்களும் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் பணிக்கு வந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காவலர்களும் "quarantine" காலத்தை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதைத்தவிர 3 பேர் மற்றும் சிறுமுகையை சேர்ந்த 1 காவலர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். மொத்தம் 544 பணியிலிருந்து காவலர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அன்னூர் - 6; மாநகர் - 95; கிணத்துக்கடவு- 34; மதுக்கரை, கே.ஜி.சாவடி - 60; பொள்ளாச்சி -5 - 180 பேர் கடந்த 22ஆம் தேதி சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
ஏற்கனவே அன்னூர், மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்த காவலர்கள் 344 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் ஒரு பெண் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மொத்தம் 544 பேருக்கான பரிசோதனையில் 537 பேருக்கு நெகட்டீவ் என வந்துள்ளது; 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; இன்று 60 காவலர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.