தமிழ்நாடு

கொரோனாவுக்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பு

கொரோனாவுக்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பு

webteam

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மதுரையை சேர்ந்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக இருந்தது.

வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த 3 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதோடு சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஈரோட்டில் சிகிச்சை பெறும் தாய்லாந்தைச் சேர்ந்த 2 பேரிடமிருந்து மதுரையை சேர்ந்த 54 வயது நபருக்கு கொரோனா தொற்று பரவியதாக சொல்லப்படுகிறது. அவர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சர்க்கரை, ரத்த அழுத்தமும் இருந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே  தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.