புதுக்கோட்டை நகர பகுதியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் எட்டு இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்திலும், மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் தொற்றின் வேகம் குறைந்தபாடில்லை, நாளொன்றுக்கு சராசரியாக 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக புதுக்கோட்டை நகர பகுதியில் நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்து வருகின்றது. பெரியார் நகர், கம்பன்நகர், திருவப்பூர் காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து எட்டு இடங்களில் தடுப்புகள் அமைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஜனத்தொகை நிறைந்த பகுதிகளில் தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வரக்கூடிய சூழ்நிலையில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் மட்டும் பரிசோதனையை அதிகப்படுத்தாமல் ஒட்டுமொத்த புதுக்கோட்டை நகராட்சியிலும் ஆங்காங்கே முகாம் நடத்தி ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.