தமிழ்நாடு

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

jagadeesh

தமிழகத்தில் கடந்த 7 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் தினசரி பாதிப்பு 200-ஐ தாண்டியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக புதிதாக கொரோனா தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தொடர்ந்து தினசரி பாதிப்பு 200-ஐ கடந்துள்ளது. நேற்று மட்டும் சென்னையில் புதிதாக 292 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையைத் தொடர்ந்து கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கோவையில் நேற்று 52 பேருக்கும், செங்கல்பட்டில் 51 பேருக்கும், திருவள்ளூரில் 49 பேருக்கும், தஞ்சையில் 37 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து நேற்று 543 பேர் குணமடைந்த நிலையில், நான்காயிரத்து 344 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மூடப்பட்ட கொரோனா சிகிச்சை சிறப்பு மையங்களையும் திறக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 16 நாட்களில் மட்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51.81 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தமிழக மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் முகக்கவசம் அணியாதவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.