தமிழ்நாடு

நாமக்கல்: கவச உடை அணிந்து வந்து வாக்களித்த கொரோனா பாதித்த பெண்மணி

sharpana

நாமக்கல்லில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்மணி கவச உடை அணிந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 74.60 % வாக்குகள் பதிவாகியிருந்தன. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்ததால் மாநில அளவில் அதிக அளவிலான வாக்குகள் பதிவாகின.

இதனிடையே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து, நாமக்கல் நகராட்சி 18-ஆவது வார்டு வாக்குச்சாவடி மையத்தில் அந்த வாக்குச் சாவடிக்கு உட்பட்ட 35 வயது மதிக்கத்தக்க கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாக்காளர் பெண்மணி ஒருவர், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்களிக்க வந்திருந்தார். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரப் பணியாளர்கள் அந்த பெண்மணிக்கு, உடல் வெப்ப அளவு பரிசோதித்து, கொரோனா தடுப்பு கவச உடை அணிவித்து வாக்கு செலுத்த அனுமதித்தனர்.

இதனையடுத்து அந்தப் பெண்மணி, முழு கவச உடை, கையுறைகள் அணிந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அந்த வாக்குச் சாவடியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.