தமிழ்நாடு

ஒரே பெயரால் குழப்பம்: கொரோனா பாதித்தவரை டிஸ்சார்ஜ் செய்த மருத்துவமனை!!

webteam

தூத்துக்குடியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், மாற்றி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர் கடந்த 19-ஆம் தேதி கொரோனா தொற்றால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரது பெயரைக் கொண்ட திருவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இன்னொருவரும் அதே மருத்துவமனையில் கடந்த 20 நாட்களுக்கு முன் சேர்க்கப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று கொரோனாவால் குணமடைந்தவர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இதில் 20 நாட்களுக்கு முன்பிருந்து சிகிச்சை பெற்று வருபவரை வீட்டுக்கு அனுப்புவதற்கு பதிலாக சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட நபரை மாற்றி அனுப்பி வைத்துள்ளனர். இந்த தகவல் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு தெரிய வந்தது. அவர் உடனே அரசு மருத்துவமனை டீனை தொடர்புகொண்டு விசாரித்தார். மேலும் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி  தவறுதலாக அனுப்பப்பட்டவரை ஒரு மணி நேரத்தில் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் விடுவிக்கப்பட்ட நபரின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அந்த நபர் அங்கு இல்லை. அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி அதிகாரிகளும் பணியாளர்களும் தூத்துக்குடி மாநகர் முழுவதும் தேடியுள்ளனர். விடுவிக்கப்பட்ட நபர் வெளியே சுற்றி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது காத்திருந்த அதிகாரிகள் அவரை அங்கிருந்து அழைத்துக்கொண்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.