ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேட்டி எடுத்த அமெரிக்க பத்திரிக்கையாளரிடம் தூத்துக்குடி போலீஸ் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் துப்பாக்கிச் சூடு அடுத்த சில தினங்களுக்கு தூத்துக்குடியில் பதட்டமான சூழலை உருவாக்கியது. தமிழகம் முழுவதும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து தூத்துக்குடி வந்த ப்ரீ லாஞ்ச் பத்திரிக்கையாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேட்டிகளை எடுத்துள்ளார். இதனையடுத்து, மக்களிடம் உரையாறிய அமெரிக்க பத்திரிக்கையாளர் மார்க் சியல்லாவிடம் தூத்துக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சியல்லா டிசம்பர் 4ம் தேதி சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளார். பின்னர் டிசம்பர் 27இல் தூத்துக்குடி வந்துள்ளார். பத்திரிகையாளர் சியல்லாவின் வரும் குறித்து எங்களுக்கு தகவல் எதுவும் அளிக்கப்படவில்லை. அவர் தங்கி இருக்கும் ஹோட்டல் உரிமையாளர்கள் கூட எங்களுக்கு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் எந்த நோக்கத்திற்காக வந்திருக்கிறார் என்பது தெரிவிக்கப்படவிலை.
ஒரு நபர் சுற்றுலா விசாவில் வந்தால், அது தொடர்பான நடவடிக்கைகளில்தான் ஈடுபட வேண்டும். ஆனால், அவர் தூத்துக்குடியில் இங்கும், அங்கும் சுற்றிக் கொண்டு மக்களிடம் பேட்டி எடுத்துக் கொண்டு வருகிறார்” என்றார்.
மேலும், தூத்துக்குடி எஸ்பி முரளி ரம்பா டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் பேசுகையில், “அமெரிக்காவைச் சேர்ந்த நபரிடம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) விசாரணை நடத்தினோம். காலையில் விசாரணை நடத்திய பின்னர், அவரை விட்டுவிட்டோம். தேவைப்பட்டால், அவரிடம் இருந்து மேலும் தகவல் பெறுவோம். இதுதொடர்பாக வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளோம்” என்று கூறினார்.
அமெரிக்க பத்திரிகையாளர் மார்க் சியல்லா பேசுகையில், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான புகார்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள டிசம்பர் 27ம் தேதி தூத்துக்குடி வந்தேன். 6-7 போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நான் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு வந்தனர். என்னிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினார். 10க்கும் மேற்பட்ட போலீசார் என்னிடம் கேள்விகளை கேட்டார்கள். ‘நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன். யாரிடம் பேசினேன், ஏன் இந்த விசாரணையை செய்கிறேன்’ என்பது குறித்து அவர்கள் கேட்டார்கள். என்னுடைய லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்களை அவர்கள் கேட்டார்கள். நான் தர மறுத்துவிட்டேன்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக இதுவரை நான் எந்த செய்தியையும் வெளியிடவில்லை. போலீசார் எனக்கு எந்த நிபந்தனைகளையும், தடைகளையும் விதிக்கவில்லை. நாட்டைவிட்டு வெளியேறுமாறும் சொல்லவில்லை. ஆனால், எப்பொழுதெல்லாம் ஹோட்டலை விட்டு வெளியேறினால் போலீசார் பாதுகாப்பிற்கு வருகிறார்கள். நான் வெளியேற்றப்பட்டால், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தெரிவிப்பேன். இல்லையென்றால் திட்டமிட்டபடி ஜனவரி 13இல் அமெரிக்கா திரும்பிவிடுவேன்” என்றார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்த சியல்லா, கார்டியன், அல் ஜசீரா உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
தகவல் - டைம்ஸ் ஆப் இந்தியா