தமிழ்நாடு

சமையல் பெண் பணியாளருக்கு தீண்டாமை கொடுமை - 75 பேர் மீது வழக்கு

சமையல் பெண் பணியாளருக்கு தீண்டாமை கொடுமை - 75 பேர் மீது வழக்கு

webteam

திருப்பூர் அருகே அரசுப் பள்ளியில் சமையல் பெண் பணியாளருக்கு தீண்டாமைக் கொடுமை செய்த புகாரில் 75 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் அருந்ததியர் வகுப்பை சேர்ந்த பெண்ணுக்கு தீண்டாமை கொடுமை செய்ததாக, 75 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ‌ப‌ள்ளியின் சமையல் பணியாளர் பாப்பாள் என்பவரை ஆதிக்க சாதியினர் பணி செய்ய விடாமல் தீண்டாமை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆதிக்க சாதியினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வன்கொடுமையை ஊக்குவித்ததாக அதிகாரிகள் மீது‌ம் நடவடிக்கை எடுக்க‌க்கோரி அருந்ததியர் வகுப்பை சேர்ந்தவர்கள் தலைமையாசிரியர் சசிகலாவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பாப்பாளை அதே இடத்தில் பணி அமர்த்தவும், தீண்டாமை கொடுமை செய்தவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் சார் ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து பழனிசாமி, ராஜாமணி, மணியாள் உள்ளிட்ட 75 பேர் மீது தாழ்த்தப்பட்டோர் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சேயூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நேரில் ஆஜராக உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது‌.