தமிழ்நாடு

பள்ளி முன்பு திருவள்ளுவர் சிலை அமைப்பதில் சர்ச்சை: நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு!

webteam

திண்டுக்கல் லூர்து அன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியின் முன்புறம் காம்பவுண்டு சுவரை ஒட்டி திருவள்ளுவர் சிலை அமைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மேட்டுப்பட்டி, அய்யன் திருவள்ளுவர் இலக்கிய பேரவை சார்பில் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'திண்டுக்கல் லூர்து அன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியின் முன்புறம் காம்பவுண்டு சுவரை ஒட்டி அய்யன் திருவள்ளுவர் சிலை அமைக்க தடையில்லாச் சான்று பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில், அமைப்புக்குழு சார்பில் எங்கள் செலவில் பீடம் அமைத்து பீடத்தின் மீது கடந்த 10.08.2021 அன்று சிலையை நிறுவினோம்.

ஆனால், திடீரென திண்டுக்கல் காவல் துறை அதிகாரிகளும், போக்குவரத்து போலீசாரும் பெருந்திரளாக அந்த இடத்திற்கு வந்து, எந்தவித காரணமும் இன்றி பீடத்தின் மேல் இருந்த சிலையை கீழே இறக்கி; வைத்து விட்டனர். இது தமிழினத்துக்கு ஏற்பட்ட அவமானமாகும். சிலை அமைக்க தகுந்த அனுமதி பெறப்பட்டது. எந்த வித இடையூறும் ஏற்படாத நிலையில், பீடத்தில் நிறுவப்பட்ட சிலையை காவல் துறையினரே எந்த முகாந்திரமும் இன்றி இறக்கி வைத்துள்ளனர். எனவே, பீடத்தில் இருந்து இறக்கப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலையை மீண்டும் பீடத்தில் நிறுவ அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தனர் மனுதாரர்கள்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு திருவள்ளுவர் சிலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், “திண்டுக்கல் லூர்து அன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியின் முன்புறம் காம்பவுண்டு சுவரை ஒட்டி அய்யன் திருவள்ளுவர் சிலை அமைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.