“நாங்களாகவே இந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு வரவில்லை. இங்குள்ளவர்களால் அழைத்துவரப்பட்டோம். எங்களை எப்படியாவது காப்பாற்றிவிடுங்கள்” என சர்ச்சைக்குள்ளான ஆதரவற்றோர் இல்லத்தில் பல முதியவர்கள் கண்ணீர்மல்க கதறுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஷ்வரம் பகுதியில் செயிண்ட் ஜோசப் என்ற ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில காலமாக இந்த ஆதரவற்றோர் இல்லத்தின் மீது பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்டன. இந்த இல்லத்தில் மாதத்திற்கு 40 முதல் 50 போ் வரை உயிரிழப்பதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் இங்கு ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் பிச்சைக்காரர்களை அழைத்து வந்து, அரசின் உரிய உத்தரவின்றி கருணைக் கொலை செய்வதாகவும் புகார் எழுந்தது. அத்துடன் மனித உடல்களும், எலும்புகளும் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. மனித எலும்புகள் பணத்திற்காக கடத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு விஸ்வரூபமெடுத்த நிலையில், 6 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இதுவரை அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
தற்போது இந்த இல்லத்தில் மொத்தமாக 350-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். அவர்களில் நிறையபேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். மற்றவர்களோ ஆதரவற்றவர்கள். இதனிடையே தாங்கள் விருப்பமில்லாமல் இந்த இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள சிலர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும்கூறும்போது, “நாங்களாகவே இந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு வரவில்லை. இங்குள்ளவர்களால் அழைத்துவரப்பட்டோம். எங்களை எப்படியாவது காப்பாற்றி வெளியே கொண்டு சென்றுவிடுங்கள்” என கண்ணீர்மல்க கதறுகின்றனர். தங்களை வெளியே விட இல்ல நிர்வாகம் அனுமதி மறுப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால் இந்த கருணை இல்லம் மீது மேலும் பல சந்தேகக் கேள்விகள் எழுகின்றது. இதனிடையே, தாங்கள் விரும்பமின்றி தங்க வைக்கப்பட்டிருப்பதாக இல்லத்தில் உள்ள முதியோர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, நிர்வாகி தாமஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க இந்த இல்லத்தில் இறப்பவர்களின் பிணங்களை அடுக்கி வைக்க புதிய கல்லறை முறையை பின்பற்றுவது மேலும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. இங்கு உடல் அடக்கம் செய்யும் முறை குறித்து கருணை இல்லத்தின் நிர்வாகி தாமஸிடம் கேட்டபோது, “ ஒரு சிறிய அறைக்குள் சடலத்தை வைத்து காற்று புகாதவாறு அடைத்து விடுவார்கள். அந்த உடலில் இருந்து வெளியாகும் வாயு மற்றும் காற்று புகாத நிலையில் உள்ள அறையால் வெப்பம் உருவாகி அந்தச் சடலம் விரைவில் மட்கிவிடும். அவ்வாறு உடல் மட்கி எலும்புகள் 30 அடி ஆழம் உள்ள ஒரு பகுதியில் சேர்ந்துவிடும்” என்றார்.
இல்லத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு இறந்தவர்களுக்கான இறப்புச் சான்று பெறும் வகையிலான நடைமுறைகளைப் பின்பற்ற சுகாதாரத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆதரவற்றோர் இல்லம் பற்றி பேசப்படும் கதைகளும், அதன் நிர்வாகத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் பல்வேறு கேள்விகளை எழுப்பும் நிலையில், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் மர்மங்களுக்கு விடைகிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.