Bike டாக்சியை தடை செய்ய வலியுறுத்தி டாக்ஸி ஓட்டுநர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு ஆவணங்களை முறையாக பராமரித்து அரசு வழிகாட்டுதல்களை கடைபிடிக்கும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், சொந்த பயன்பாட்டுக்கான இருசக்கர வாகனங்களை பைக் டாக்ஸியாக பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பைக் டாக்ஸிக்கு தடை விதிக்காவிட்டால் ஓட்டுநர் உரிமத்தையும், வாக்காளர் அடையாள அட்டைடையும் திருப்பிக் கொடுப்போம் என சூளுரைத்தனர்.
செய்தியாளர்கள் மத்தியில் பேசிய taxi ஓட்டுநர்களின் பிரதிநிதி ஒருவர், “பைக் டாக்ஸியில் அதிக பாலியல் தொந்தரவுகள் நடக்கின்றன. யாரென்றே தெரியாதவர்களுடன் 10, 20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அனுப்புகின்றனர்” என அவதூறாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர் பேசுகையில், “எங்களுடைய வாகனத்தை பராமரிக்க நாங்கள் பல்வேறு ஆவணங்களை பராமரிக்கிறோம், எங்கள் வாகனத்தில் பயணம்செய்யும்போது விபத்து ஏற்பட்டால் கூட அதற்கான இன்சூரன்ஸ் இருக்கிறது. ஆனால் இது எதுவுமே இல்லாமல் ஒரு ஓட்டை வண்டியை வைத்திருந்தால் கூட பைக் டாக்ஸியில் லாக் இன் செய்துகொள்ளலாம்.
எங்கள் மனைவியின் தாலியை கூட அடகுவைத்துவிட்டு தான் நாங்கள் வாகனத்தை பயன்படுத்துகிறோம், ஆனால் சொந்த வாகனத்தை வாடகை வாகனமாக பயன்படுத்தி பைக் டாக்ஸியில் பல்வேறு இளைஞர்கள் நன்றாக சம்பாதிக்கிறார்கள். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அரசு உத்தரவின்படி சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்துவது தவறு, அதனால் பைக் டாக்ஸியை தடைசெய்யவேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை வெளிப்படுத்தினார். அதனால் செய்தியாளர்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மக்களையும், பெண்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அவர், ”கோயம்புத்தூர் மக்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், உங்க வீட்டு பெண்களை விட உங்களுக்கு பணம் முக்கியமா? எங்க கார்ல தான் நீங்க வரணும்னு நான் சொல்லவரல. ஆனா நம்ம வீட்டு பெண்களை நிமிர்ந்து பார்த்தேலே வெட்டுற கோவக்கார ஊரு நம்ம ஊரு, நம்ம கோயம்புத்தூர் மண்ணு. அப்பேற்பட்ட கோயம்புத்தூர் மண்ணுல எவன்னே தெரியாத ஒருத்தன்கூட 10 ரூபாய், 20 ரூபாய்க்கு ஆசப்பட்டு பைக் டாக்ஸில ஏத்தி அனுப்புறீங்க” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
உடனடியாக குறுக்கிட்ட செய்தியாளர்கள் சாதி ரீதியிலான கருத்தை பதிவிடுகிறீர்களா?, ஆணும் பெண்ணும் பைக்ல போனா தவறா?, எல்லா இடத்துலையும் தான் பாலியல் தொந்தரவுகள் நடக்குது? என்ன பைக் டாக்ஸி ஓட்டுறவங்களை மிரட்டுறீங்களா? என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய அந்நபர், “பைக் டாக்ஸியில் தான் பாலியல் தொல்லை நடந்திருக்கு, எங்க வாகனத்தில் நடந்ததற்கான எந்த பதிவாவது இருக்கிறதா? செய்திகளில் பைக் டாக்ஸியில் பாலியல் தொல்லை நடந்ததாக வந்ததை தான் சொல்றோம். பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யாமல் பைக் டாக்ஸியில் அனுப்புறீங்களே, இது நியாயமா. இதுதான் எங்கள் கேள்வி. எங்கள் கோவையில் இதுபோல எதாவது பாலியல் தொல்லை நடந்ததா ரெக்கார்ட் இருந்தா சொல்லுங்க” என பேசினார்.
அப்போது கோவையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி சிறுமி டாக்ஸியில் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது சக ஓட்டுநர்கள் சமாதானம் செய்து பேட்டியை முடித்து விட்டு சென்று விட்டனர்.