தமிழ்நாடு

தீண்டாமை எந்த வகையில் இருந்தாலும் நீதிமன்றம் அதனை ஏற்காது: நீதிபதிகள்

தீண்டாமை எந்த வகையில் இருந்தாலும் நீதிமன்றம் அதனை ஏற்காது: நீதிபதிகள்

webteam

தீண்டாமை எந்த வடிவத்தில் இருந்தாலும் அதனை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் சந்தையூர் கிராமத்தில் உள்ள ராஜ காளியம்மன் கோயிலுக்கு உள்ளே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் நுழையக் கூடாது என்பதற்காக, மற்றொரு தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் தீண்டாமைச் சுவரை எழுப்பினர். இதனால் கோபமுற்ற ஒரு தரப்பு போராட்டத்தில் இறங்கியதை அடுத்து, சுவரின் ஒரு பகுதியை மாவட்ட நிர்வாகம் அகற்றியது. மேலும் உயர்நீதிமன்ற மதுரை கிளையும் சுவரை அகற்ற உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சுவரை எழுப்பிய சமூகத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து சுவர் எழுப்பப்பட்டுள்ளதாகவும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினரை கோயில் உள்ளே அனுமதிக்காத தீண்டாமை சுவராகவும் அது இருப்பதால், அதனை அகற்ற உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது. ஒரு தாழ்த்தபட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் மற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு எதிராக தீண்டாமை புரிவதா என நீதிபதிகள் ஆச்சரியத்துடன் கேட்டனர். மேலும் தீண்டாமை எந்த வகையில் இருந்தாலும் அதனை நீதிமன்றம் ஏற்காது என கூறிய நீதிபதிகள், கோயிலுக்கு உள்ளேயும், கோயில் இருக்கும் இடத்திலும் யாரையும் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறக்கூடாது என்றனர். 

அதனை ஏற்றுக்கொண்ட மனுதாரர் தரப்பு, அனைவரும் சாதி பாகுபாடின்றி கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறினர். பின்னர் அரசாங்க இடத்தில் சுவர் கட்டியது தவறு என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சர்ச்சைக்குரிய சுவர் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மதுரை ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.