தமிழ்நாடு

ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்

webteam

சென்னை- பூந்தமல்லியை இணைக்கும் ஈ.வெ.ரா பெரியார் சாலை கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என பெயர் மாற்றப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆனது. இதனையடுத்து தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.

சென்னையில் இருந்து மேற்கு பகுதிகளை இணைப்பதற்காக ஆங்கிலேயர்கள் காலத்தில் சென்னை ஜீரோ பாயிண்டிற்கும் பூந்தமல்லிக்கும் இடையே சாலை உருவாக்கப்பட்டு அதற்கு கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோட் என பெயரிடப்பட்டது. இந்த நிலையில் 1979-ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடிய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அந்த சாலைக்கு ஈ.வெ.ரா பெரியார் சாலை என பெயர் மாற்றம் செய்தார். இந்த நிலையில் எம்.ஜி.ஆர் வைத்த பெயருக்கு பதிலாக மீண்டும் ஆங்கிலேயர்கள் வைத்த கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என்ற பெயர் வைக்கப்பட்டதற்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின், கி.வீரமணி, வைகோ, டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டன அறிக்கையை விடுத்த நிலையில் திராவிடர் விடுதலை கழகத்தினர் நெடுஞ்சாலை துறையால் வைக்கப்பட்ட பெயர் பலகையில் கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோட் என்ற பெயரை மட்டும் கருப்பு மை பூசி அழித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்

இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர் விளக்கம் அளித்தார். அதில், “ கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோட் என்ற பெயர் மட்டுமே நெடுஞ்சாலைத்துறை ஆவணங்களில் உள்ளது. அதனால் அந்த பெயரை கொண்டே பதாகை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை மட்டுமே அது ஈ.வெ.ரா பெரியார் சாலை என அழைக்கப்படுகிறது” என்றார்.