ஒகி புயலையொட்டி நெல்லை மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, அதன் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தற்போது பாபநாசம் அணையில் இருந்து 4,359 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.
பணகுடி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மழை தொடர்பான புகார்களை 1077 என்ற தொலைபேசி எண்ணிலும், voctirunelveli@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தெரிவிக்கலாம். 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் மீட்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.