தமிழ்நாடு

ஒப்பந்ததாரர் தற்கொலை: டிடிவி ஆதரவு எம்எல்ஏ பழனியப்பனுக்கு முன்ஜாமீன்

ஒப்பந்ததாரர் தற்கொலை: டிடிவி ஆதரவு எம்எல்ஏ பழனியப்பனுக்கு முன்ஜாமீன்

webteam

ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் வழக்கில் தினகரன் ஆதரவு எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பனுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்‌நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசு மருத்துவக் கல்லூரி கட்டட ‌ஒப்பந்ததாரர் நாமக்கல்‌ சுப்பிரமணியன் கடந்த மே 8ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், ஒப்பந்ததாரர் தென்னரசு ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, நாமக்கல்‌ சிபிசிஐடி போலீஸார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதையொட்டி, இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த தற்கொலை வழக்கில் தங்களுக்குத் தொடர்பில்லை எ‌னவும், பழனியப்பனும், தென்னரசுவும் கூறியிருந்தனர்.

அவர்களது வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் தற்கொலை தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தார். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, பின்னர் அதை தற்கொலைக்குத் தூண்டியதால் ஏற்பட்ட மரணம் என மாற்றினார்களா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, சிபிசிஐடி போலீஸாருக்கு விசார‌ணை நடத்த வேறு வழக்குகள் இல்லையா? என்றும் கேட்டார். பின்னர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், ஒப்பந்ததாரர் தென்னரசு ஆகியோருக்கு முன் ஜாமீன் வழங்கிய நீதிபதி, இருவரும் தேவைப்படும்போது விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.