சேலம் மற்றும் ஏற்காடு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சேலம் மற்றும் ஏற்காடு பகுதிகளில் தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் அதிகமாக கனமழை கொட்டித் தீர்த்ததையடுத்து, சேலம் மாநகராட்சியின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியது. ஆனால் தண்ணீர் செல்வதற்கான முறையான வடிகால் வசதி இல்லாததால், மழை நீரானது குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்த மக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, கண்ணங்குறிச்சி புது ஏரியும் நிரம்பியுள்ளதால், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளும் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொண்டாலம்பட்டி பகுதியில் கழிவுநீருடன் மழை நீர் சேர்ந்துள்ளதால், நோய்த்தொற்று ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.