தமிழகத்தில் வைரஸ் காய்ச்சலால் தினமும் பலர் பலியாகி வருகின்றனர். குறிப்பாக, குழந்தைகளும், சிறுவர்களும் இந்தக் காய்ச்சலால் உயிரிழந்து வருகின்றனர். இந்த வாரத்தில் மட்டும் திருவண்ணாமலையில் 4 வயது சிறுவன், திருவள்ளூரில் ஒன்பதாம் வகுப்பு மாணவன், கன்னியாகுமரியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் என மூன்று சிறுவர்கள் வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை கிராமத்தில் வைரஸ் காய்ச்சல் காரணமாக 4 வயது சிறுவன் பிரேம்சரண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். கடந்த 6 மாதங்களுக்கு முன் பிரேம்சரணின் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காய்ச்சல் பாதிப்பினால் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது தண்டரை கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர் சந்தேக மரணம் என்பதால் வெறையூர் காவல் துறையினர் பிரேதத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், இந்த மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வசித்து வரும் கூலித்தொழிலாளியின் மகன் வினோத் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அப்பகுதியிலுள்ள மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். காய்ச்சல் அதிகமானதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினோத் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். அப்பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடு காரணமாக மேலும் பலருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்ட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகம் நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
கேராளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் அந்த மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குமரி மாவட்டத்திலும் 100-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டு தனியார் மருத்துவமனையில் கடந்த ஐந்து தினங்களாக சிகிச்சை பெற்று வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் முன்பு போர் கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையும் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.