சென்னையை மிரட்டும் சங்கிலிப்பறிப்பு கொள்ளையர்களால் அண்மையில் பாதிக்கப்பட்டவர் அயனாவரத்தைச் சேர்ந்த தனலட்சுமி. தனது மகனின் படிப்புக்காக சமையல் வேலை செய்யும் தனலட்சுமி கொள்ளையர்களால் இன்று தனது தங்கச் சங்கிலியை பறிகொடுத்து தவித்து நிற்கிறார்.
சென்னை அயனாவரம் என்.எம்.கே. தெருவில் ஒரு சிறிய ஓட்டு வீட்டில் வசித்து வருபவர் தனலட்சுமி. இவரது கணவர் மோகன். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சமையல் வேலை செய்யும் தனலட்சுமி, காலை 7 மணிக்கு வேலைக்குச் சென்றால் நண்பகலில் தான் வீடு திரும்ப முடியும். வழக்கம் போல் ஏப்ரல் 24-ம் தேதி பிற்பகல் ஒருமணி அளவில் சமையல் வேலையை முடித்துவிட்டு அயனாவரம் கே.ஹெச்.சாலையில் தனலட்சுமி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நின்ற ஆட்டோவின் பின்னால் வாகனத்தில் அமர்ந்தபடி மறைந்திருந்த இருவர், தனலட்சுமி அருகே வந்ததும் நொடிப்பொழுதில் அவர் அணிந்திருந்த ஐந்தரை பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதனால் தனலட்சுமி அலறியடித்தபடி கதறினார். இருப்பினும் அவரால் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல்போனது. கொள்ளையர்கள் நகைளுடன் தப்பிச் சென்றுவிட்டனர்.
தனலட்சுமியை தொடர்ந்து சங்கிலியை இழந்தவர்கள் பட்டியலில் இணைகிறார் ஐ.சி.எப். வடக்கு காலனியைச் சேர்ந்த மூதாட்டி குப்பம்மாள். ஏப்ரல் 25-ம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சாலையில் நடந்து சென்ற போது குப்பம்மாள் அணிந்திருந்த 4 சவரன் சங்கிலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். அதிகரிக்கும் சங்கிலி பறிப்பு சம்பவங்களால் பகலிலேயே அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலையில் இருப்பதாக பெண்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.