ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்கக் கோரி அலங்காநல்லூரில் 21 மணி நேரமாக தொடர் போராட்டம் நடத்திய இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட 240 பேர் போலீசாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.
காலம் காலமாக அலங்காநல்லூரின் அடையாளமாக இருப்பது ஜல்லிக்கட்டு. உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும், தடை காரணமாக பொலிவிழந்த நிலையில், இந்த முறை இளைஞர்களின் தன்னெழுச்சி அலங்காநல்லூரை போர்களம்போல காட்சியளிக்கச் செய்தது.
சென்னை, நாமக்கல், புதுச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சமூக வலைதளங்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் நேற்று அலங்காநல்லூரில் குவிந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அலங்காநல்லூருக்கு வரும் 4 வழிகளும் தடை ஏற்படுத்தப்பட்டிருந்தன. இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. அதையும் மீறி, காலை 9 மணி அளவில் பெருமளவிலான இளைஞர்கள், அலங்காநல்லூர் வாடிவாசல் மைதானத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கு ஜல்லிக்கட்டு விழா கமிட்டி சார்பில் பேரணி நடைபெற்றது. இயக்குநர் அமீர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு பேசினர்.
இதனைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் இரண்டு கிலோமீட்டர்தூரத்திற்கு பேரணி நடைபெற்றது. இதனையடுத்து அலங்காநல்லூர் காளியம்மன் கோவிலில் உள்ள காளைகளுக்கு பூஜை செய்யப்பட்டன. அப்போது சில காளைகள் அவிழ்த்துவிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் பத்துக்கும் அதிகமானோர் காயம் பட்டனர். எனினும், அலங்காநல்லூரில் இளைஞர்கள் கூட்டம் கலையாமல், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். தொடர் நிகழ்வுகளால் அலங்காநல்லூர் முழுவதுமே ஸ்தம்பித்துபோனது.
நேற்று காலை சுமார் 9 மணிக்குத் தொடங்கிய போராட்டம் 21 மணி நேரத்திற்கும் மேலாக இன்று காலை வரை நீடித்தது. அப்போது போராட்டக்காரர்களை 10 நிமிடத்தில் கலைந்து செல்லுமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். எனவே கொட்டும் பனியிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள், பெண்கள் உள்பட 240 பேர் போலீசாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்படும் போராட்டக்காரர்கள் பீட்டாவை எதிர்த்து கடும் முழக்கமிட்டனர். கைதானவர்கள் சோழவந்தான், வாடிப்பட்டி திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.