வேலூர் அருகே 100 அடி பள்ளத்தில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் பத்திலப்பள்ளி மலை பகுதியில் ஆந்திர எல்லைக்கு அருகேயுள்ள கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து, சென்னைக்கு மைதா மாவு லோடு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. வி.கோட்டாவில் இருந்து பேரணாம்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தபோது, அதிகாலையில் தமிழக-ஆந்திர எல்லை மலை பகுதியின் கடினமான வளைவில் லாரி கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் சுமார் 100 அடி பள்ளத்தில் லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியது. இதில் லாரி முழுவதும் நொறுங்கியது. அதிலிருந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் பஷீர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு தீயணைப்பு, வன மற்றும் காவல்துறையினர் ஓட்டுநரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.