தமிழ்நாடு

மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானத்துறையினர் போராட்டம்

webteam

மணல் தட்டுப்பாட்டிற்கு தீர்வுகாணக் கோரி புதுக்கோட்டையில் கட்டுமானத்துறையினர் தாரை தப்பட்டையுடன் போராட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டையில் மணல் தட்டுப்பாட்டிற்கு தீர்வுகாணக் கோரி கட்டுமானத்துறையினர் 1000-க்கும் அதிகமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பாடைகட்டி, தாரைதப்பட்டை அடித்து தங்கள் ஆதங்கத்தை கட்டுமானப் பணியாளர்கள் வெளிப்படுத்தினர். புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம் முன் கட்டடப் பொறியாளர்கள் சங்கம், கட்டடத் தொழிலாளர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் மற்றும் மாட்டுவண்டி உரிமையாளர்கள் கூடி மறியலில் ஈடுபட்டனர்.

மணல் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் எம் சாண்ட் உற்பத்தியை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், எம் சாண்டிற்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். கட்டுமானத்தொழிலை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த மறியல் போராட்டத்தால் ஒருமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் அவர்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர்.