முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் pt web
தமிழ்நாடு

“உரிமைப் போராட்டம் நடத்தும் சூழலில் தமிழ்நாடு” அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் உரை

தொகுதி மறு சீரமைப்பு என்ற சதியை அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து முறியடிக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அங்கேஷ்வர்

அனைத்துக் கட்சிக் கூட்டம்.

திமுக தோழமைக் கட்சிகள், அதிமுக, பாமக, தேமுதிக, தவெக, ஐஜேகே உள்ளிட்ட 56 கட்சிகள் பங்கேற்றுள்ளன.

அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்கள் குழு குடியரசுத் தலைவரைச் சந்தித்து தீர்மானத்தை நேரில் வழங்கத் திட்டமிட்டுள்ளன.

கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர்..

AllPartyMeeting

”தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதன்காரணமாக தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட உள்ளது” - முதலமைச்சர்

”சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும்” - முதலமைச்சர்

முதலமைச்சரின் உரை, “தொகுதி மறுசீரமைப்பைப் பொதுவாக மக்கள் தொகையின் அடிப்படையில்தான் செய்வார்கள். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்தியாவின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது.

இதனால் தொகுதி மறுசீரமைப்பில், மக்கள்தொகை குறைவாக இருப்பதால் நமது தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாடு 8 மக்களவை இடங்களை இழக்குமெனச் சொல்கிறார்கள்.

நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டு, தற்போதைய விகிதாசாரத்தின்படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போதைய மக்கள்தொகையின் படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் 10 தொகுதிகள்தான் கூடுதலாகக் கிடைக்கும். இதனால் 12 தொகுதிகளை இழக்க நேரிடும். அதிக மக்கள் தொகைக் கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும்.

இது உறுப்பினர்களின் எண்ணிக்கைப் பற்றிய கவலை அல்ல. தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த கவலை. இந்த சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும்” என்றார்.

ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்குமே அபாயகமாரன செயல்

தொகுதி மறுசீரமைப்பு ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்குமே அபாயகரமான செயல்.. இதில் நமக்குள் கருத்துமாறுபாடு இருக்காது என்று நினைக்கின்றேன். இருக்கக்கூடாது என்றும் விரும்புகிறேன்..

இது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்புக்கும் தென் மாநிலங்களின் அரசியல் உரிமைகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது இந்திய ஜனநாயகத்தில் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் அரசியல் உரிமைகள் மீதான நேரடித்தாக்குதல்.

முதலமைச்சர் முன்வைத்த தீர்மானங்களில் சில..

1. இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மக்கள்தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாக கடுமையாக எதிர்க்கிறது.

2. நாட்டின் நலனுக்காக மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை முனைப்போடு செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. இந்த வகையில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்ற தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று அப்போதைய பிரதமர் உறுதி அளித்தவாறு, தற்போதும் இந்த வரையறை 2026 ஆம் ஆண்டிலிருந்து மேலும் முப்பது ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்.

MKStalin

3. தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை. அதேசமயத்தில் சமூக, பொருளாதார நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்கு தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக்கூடாது என அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.

4. இக்கோரிக்கைகளையும், அதுசார்ந்த போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்னை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை கட்சிகளுக்கு அனுப்பிடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

”பாஜக மட்டுமே அங்கீகரித்தது” - நாராயணன் திருப்பதி

தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “தென்னிந்தியா நாட்டின் மக்கள் தொகையைக் குறைப்பதில் உதவியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால்தான் அவர்களுக்கு நிதி ஆணையத்தில் இருந்து 0.5% கிடைத்தது. பாஜக அரசு மட்டுமே அவர்களின் பங்களிப்பை அங்கீகரித்தது, திமுக இல்லை”

கூட்டு நடவடிக்கைக் குழு - பாமக விசிக ஆதரவு

முதலமைச்சர் மற்ற தென்மாநிலங்களுக்கு நேரில் சென்று ஒருங்கிணைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்மாநில பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக்குழுவை விசிக வரவேற்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தராசு ஷ்யாம் விளக்கம்...

அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் புதிய தலைமுறையிடம் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாடு மற்றும் தென்மாநிலங்களுக்குக் கிடைக்கும் அதிகாரப் பகிர்வைக் குறைத்துவிடும் என ஒரு தரப்பினர் சொல்கின்றனர்.

எந்த மறுசீரமைப்பு வந்தாலும் அது மக்கள்தொகை அடிப்படையில்தான் அமையும் என்கிற நிலை இருக்கிறது” என்றார். அவர் பேசிய முழு விபரங்களையும் காணொளியில் காணலாம்..

அதிமுக ஆதரவு

தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக முழு ஆதரவு தெரிவிக்கும்,. 7.2% என்ற தற்போதைய பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கட்சியினர் தெரிவித்தது என்ன?

தொகுதி மறுசீரமைப்பு என்பது ஒரு கட்சியின் பிரச்னை அல்ல. அது ஒரு மாநிலத்தின் பிரச்னை என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது என்றும் தற்போதுள்ள எண்ணிக்கையே தொடர வேண்டும் என்றும் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் மறுவரையை மேற்கொள்ளக்கூடாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினைக் கூட்டியுள்ளார்.

தொகுதி மறுவரையறை செய்தே தீர வேண்டுமென்ற முடிவை இந்திய ஒன்றிய அரசு மேற்கொள்ளுமானால், இந்தியா முழுவதிலும் அனைத்து மாநிலங்களுக்கும் சமச்சீராக எண்ணிக்கையை உயர்த்தும் ஆலோசனையை வழங்கலாம் என விசிக சார்பில் குறிப்பிட்டுள்ளோம். தொகுதிகளின் எண்ணிக்கை வரையறை போலவே தொகுதிகளின் எல்லை வரையறையும் மிக முக்கியமானது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிறும்பான்மையின மக்களது வாக்குகளை சிதறடிக்கும் வகையில் எல்லை மறுசீரமைப்பு நடந்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டி, வரும்காலங்களில் இதுபோன்ற எல்லை மறுசீரமைப்பு கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியனாகவும் தமிழனாகவும் வலியுறுத்துகிறேன்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “கொள்கை முரண்களை ஒத்திவைத்துவிட்டு தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காகக் கூடியுள்ளோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள கட்சிகளுக்கு பாராட்டுகள்.

எந்தத் தேவையும் இன்றி நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு எனும் பேச்சை யார் கிளப்புகிறார்கள்? எந்த நேரத்தில் பேசுகிறார்கள்? எதற்காகப் பேசுகிறார்கள்? என்பதும் கவனத்திற்குறியது. இன்றல்ல, நாளையல்ல.. எப்போதுமே நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவராமல் இருப்பதே ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் இந்தியாவின் பன்முகத்தன்மையையும் காக்கும் என்பதே ஒரு இந்தியனாகவும், தமிழனாகவும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவு...

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளுக்கு நன்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை உறுதியாகவும் தெளிவாகவும் உணர்த்தும் என்றும் தெரிவித்துள்ளார்.