கன்னிமாரா நூலகத்தை புதுப்பிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் பாரம்பரியமிக்க நூலகமாக திகழ்கிறது கன்னிமாரா. 1896-ஆம் ஆண்டு இந்தோ-சரசெனிக் பாணியில் கட்டப்பட்ட இந்த நூலகமானது, நூற்றாண்டுகளை கடந்து பழமைவாய்ந்த புத்தகங்களின் களஞ்சியமாக விளங்குகிறது. தற்போது இருக்கும் கட்டடமானது 1970-ஆம் ஆண்டுகளில் நூலகத்தின் பழமைவாய்ந்த பகுதியோடு இணைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கட்டடத்தின் மேல்தளம் பழைமையின் காரணமாக சேதமடைந்தது. அத்துடன் கட்டடத்தின் இரண்டு கோபுரக் கூம்புகளும் சேதமடைந்துள்ளன.
இதனால் நூலகத்தின் மேற்கூரையில் தற்பொழுது நீர் கசிவு ஏற்படுகிறது. இந்நிலையில் நூலகத்தை சீரமைத்து புதுப்பிக்கும் பணிகள் திட்டமிடப்பட்டன. அதன்படி, பள்ளிக்கல்வித்துறையின் வருடாந்திர பராமரிப்பு பணி நிதி ஒதுக்கீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை பொதுப்பணித்துறை நிர்வாகம் செய்து வருகிறது. கட்டடத்தின் சில பகுதிகள் சேதமடைந்தற்கு அதன் நீண்ட கால பயன்பாடே காரணம் எனப்படுகிறது. இந்த சீரமைப்பு பணிகள் முழுவதும் பாரம்பரியம் மாறாமல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு கட்டட நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சீரமைப்பு மற்றும் மின்சார பணிகள் இரண்டிற்கும் சேர்த்து ரூ.1.5 கோடி செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கூரையின் உள்பகுதியில் மரப் பலகைகளை பயன்படுத்தி கட்டத்தின் தோற்றம் மாறாமல் பணிகள் நடைபெறுவதாக தெரிகிறது. இந்த சீரமைப்பு பணிகள் ஒன்பது மாதங்களில் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.