இடைத்தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் விக்ரவாண்டியில் திமுகவும் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்ரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குமரி அனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் விக்ர வாண்டி தொகுதியில் திமுகவும் போட்டியிடும் என்றார். விக்ரவாண்டி தொகுதிக்காக, நாளை மறுநாள் திமுக சார்பில் விருப்ப மனு பெறப்படும் என்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.