தமிழ்நாடு

“கருணாநிதி உடல்நிலை நன்றாக இருப்பதில் மகிழ்ச்சி” - ராகுல் பேட்டி

“கருணாநிதி உடல்நிலை நன்றாக இருப்பதில் மகிழ்ச்சி” - ராகுல் பேட்டி

rajakannan

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை நன்றாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். 

சென்னை காவேரி மருத்துவமனையில் ‌திமுக தலைவர் கருணாநிதி 4ஆவது‌ நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ‌28ஆம் தேதி ம‌ருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நலம் குறித்து, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரி‌லால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை ‌முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்று விசாரித்துள்ளனர்.

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காவேரி மருத்துவமனைக்கு வந்தார். கருணாநிதியின் நலம் விசாரித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, “தீவிர சிகிச்சை பிரிவில் கருணாநிதியை பார்த்தேன். அவர் நலமுடன் உள்ளார். கருணாநிதி தமிழக மக்களின் உத்வேகமாக இருந்து வருகிறார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. கருணாநிதி நலம் பெற்று வர எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். 

காங்கிரஸ் கட்சிக்கும், திமுக தலைவர் கருணாநிதிக்கும் நீண்ட காலமாக நட்பு இருந்து வருகிறது. கருணாநிதி உடல்நிலை நன்றாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கருணாநிதி விரைவில் குணமடைய சோனியா காந்தி வாழ்த்துகளை தெரிவித்தார்” என்றார்.