எம்.பி தேர்தலையொட்டி தமிழகத்தில் இளம் நடிகர்களை களமிறக்கவுள்ளதாக தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் செயல் தலைவராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக, கன்னியாகுமரியில் உள்ள தனது சொந்த ஊர் கோயிலுக்கு வசந்தகுமார் வருகை தந்தார். அங்கு சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் இளம் நடிகர்களை களமிறக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளோம். அவ்வாறு களமிறக்கினால் கூட்டணி மேலும் வலுப்பெறும். நடிகர்களின் விபரம் பின்னால் வெளியிடப்படும்.
கமல் ஒவ்வொரு வேளையிலும் ஒவ்வொரு விதமாக பேசி வருகிறார். திமுக, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேசி அறிவிப்பார்கள். பிரதமர் தனது விளம்பரத்திற்காக மட்டும் தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார். கஜா புயலின்போதும் ஒகி புயலின்போதும் உரிய நேரத்தில் வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை. வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி நூறு சதவீத வெற்றி பெறும். அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெய இயலாது” என தெரிவித்தார்.