வாட்ஸ் அப் குழு மற்றும் சமூக வலை தளங்களில் ஆபாசமாக மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி திரிபாதியிடம் மனு அளித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றை சமூக வலைதளங்களில் தான் விமர்சித்து இருந்ததாகவும், இதனை அடுத்து பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கல்யாண்ராமன் உள்ளிட்ட சிலர் தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் மிக மோசமான மிரட்டல்களை விடுத்து வருவதாகவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல் வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கி அதிலும் தனக்கு எதிராக ஆபாச மிரட்டல்களை விடுத்து வருவதாகவும் ஜோதிமணி தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும், தனக்கு எதிராக ஆபாச மிரட்டல்கள் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். டிஜிபி அலுவலகத்திற்கு இது தொடர்பாக மனு அளிக்க வந்த ஜோதிமணியுடன், காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்த யசோதா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலர் ஆளூர் ஷா நவாஸ் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
புகார் மனுவைக் கொடுத்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, தனக்கு வந்த ஆபாச மிரட்டல்கள் சொல்வதற்கோ, ஊடகங்களில் எழுதுவதற்கோ முடியாதவை என்றார். அந்த ஆபாச மிரட்டல் குரல்களுக்கும் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசையின் குரலுக்கும் வேறுபாடு இல்லை என்றும் ஜோதிமணி கூறினார்.