ஆர்.என். ரவி - காங்கிரஸ் எம்பி ஜோதிமணி web
தமிழ்நாடு

’திமுக கூட்டணியின் நட்சத்திர பேச்சாளர் ஆர்.என். ரவி..’ - காங்கிரஸ் எம்பி ஜோதிமணி

தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி மாற்றப்பட்டது குறித்து பேசியிருக்கும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சூசகமாக விமர்சித்துள்ளார்..

Rishan Vengai

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, ஆளுநர் ஆர்.என். ரவியை திமுக கூட்டணியின் நட்சத்திர பேச்சாளராக விமர்சித்தார். அவர் தமிழ்நாட்டுக்கு எதிராக தொடர்ந்து பேசியதால், பாஜக வெற்றி பெற முடியாது எனவும், மேற்கு வங்கத்திலும் அவர் அதேபோல நட்சத்திர பேச்சாளராக இருப்பார் எனவும் கூறினார்.

2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதிசெய்யப்படுமா என்ற பரபரப்பு தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையின் கடைசி தினம் வரை இருந்துவந்தது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லையென்றால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகவேண்டும் என்ற கருத்தை பல்வேறு காங்கிரஸ் நிர்வாகிகள் முன்மொழிந்த நிலையில், கூட்டணி உறுதிசெய்யப்படுவதில் இழுபறி நீடித்தது.

போதாக்குறைக்கு முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் வாழ்த்தில் சகோதரர் என்ற வார்த்தையை ராகுல் காந்தி தவிர்த்ததும், பின்னர் ராகுலுக்கு அளித்த பதிலில் முதல்வர் ஸ்டாலினும் பிரதர் என்ற வார்த்தையை தவிர்த்ததும் காங்கிரஸ்-திமுக இடையே முறிவு ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ராகுல் - ஸ்டாலின்

ஆனால் இறுதிப்பேச்சுவார்த்தையில் மூத்த காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரம் கலந்துகொண்ட பிறகு, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தியாகியுள்ளது.

இந்நிலையில் கூட்டணி இறுதிசெய்யப்பட்ட பிறகு எதிர்கட்சிகளை விமர்சிப்பதில் காங்கிரஸ் நிர்வாகிகளும் களமிறங்கி உள்ளன. அதன்படி பாஜக மற்றும் அதிமுகவை காங்கிரஸ் எம்பி ஜோதிமணி விமர்சித்துள்ளார்.

திமுக கூட்டணியின் நட்சத்திர பேச்சாளர் ஆர்.என். ரவி..

நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, ”தமிழ்நாட்டில் இன்று மாண்புமிகு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் மாற்றப்பட்டது ஒரு வருத்தமான விசயம் தான். ஏனென்றால் எங்களுடைய கூட்டணிக்கு அவர் ஒரு நட்சத்திர பேச்சாளரா இருந்தார், அவருடைய தொடர்ச்சியான தமிழ்நாடு விரோத, தமிழர் விரோத போக்கானது தமிழ்நாட்டு மக்களால் விரும்பப்படாத போக்காக இருந்தது.

தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டின் சாதனைக்கும் தொடர்ந்து எதிராக பேசுவதும், தமிழ்நாட்டை தொடர்ந்து மோசமான மாநிலமாக சித்தரிப்பதும், திருவள்ளுவருக்கு காவி அடிப்பதும், ஆளுநர் மாளிகையை அதிகாரப்பூர்வம் இல்லாத பாஜகவின் தலைமை அலுவலகமாக செயல்பட வைப்பதுமாக இருந்ததாக தான் வரலாற்றில் அவர் பெயர் இடம்பெறும்.

மம்தா பானர்ஜி ஆளுநர் ஆர்.என்.ரவி நியமனத்தை தன்னைக் கேட்காமலேயே போட்டுவிட்டதாக வருத்தப்பட்டார். ஆனால் அவர் வருத்தப்பட தேவையில்லை, தமிழகத்திற்கு எப்படி நட்சத்திர பேச்சாளராக ஆளுநர் ரவி இருந்தாரோ, அதேபோலவே மேற்கு வங்கத்திற்கும் நட்சத்திர பேச்சாளராக அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்” என கூறினார்.

மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டது பாஜக தமிழ்நாட்டில் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்துவிட்டதை காட்டுவதாகவும் விமர்சித்தார்.