காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், தற்போது காலமானார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காய்ச்சல் பாதிப்புக்காக கடந்த நவம்பர் 11-ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் சாா்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்ட்டு, அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், திடீரென அவரின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், அதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இன்று காலையில் தகவல்கள் வெளியாகின... இந்த தகவலைத் தொடர்ந்து, ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் இருந்தனர்..
இந்தநிலையில்தான், அவர் காலமானார் என்ற செய்தி வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக பொறுப்பு வகித்த திருமகனின் மறைவைத் தொடர்ந்து திருமகனின் தந்தையான EVKS இளங்கோவன் அந்த தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.