தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் இன்ஜினியர் பிரபாகரன் கரூர் எம்பி ஜோதிமணிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூர் எம்பி ஜோதிமணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக் குழு உறுப்பினரும், கரூர் மாவட்ட தேர்தல் பணிக்குழு உறுப்பினர் இன்ஜினியர் பிரபாகர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜோதிமணி தன்னிச்சையாக செயல்பட்டு நகராட்சி தேர்தலில் தோல்வியைத் தேடித் தர முயல்வதாகவும், தனிப்பட்ட முறையில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது உள்ள காழ்ப்புணர்ச்சியுடன் அவரை ஒருமையில் பேசி அநாகரிகமாக நடந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் மீதும், திமுகவின் மீதும் பழி போடுவதாகாவும் கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் பேசும்போது, ''தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக 20 வருடங்களுக்கு மேலாக இருக்கிறேன். கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருக்கிறேன். தேர்தல் பணிக்குழு உறுப்பினராக கட்சி என்னை நியமித்துள்ளது. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கண்டறிந்த பின்பு திமுகவுடன் பேசியிருக்க வேண்டும். கமிட்டி கூட்டாமல், நேரடியாக திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜியை தரக்குறைவாக பேசி, அவரிடம் சென்று சண்டை போட்டுவிட்டு, காங்கிரஸை அவமானப்படுத்தியதாக பொய் குற்றச்சாட்டு முன்வைப்பது கண்டனத்துக்குரியது'' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வந்த தன்னை திமுகவினர் வெளியேற்றிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றம்சாட்டியிருந்தார்.
கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பான இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கலந்தாலோசிக்காமல் வார்டு பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த ஜோதிமணி இதுபற்றி கேட்டதாகவும், அதற்கு கூட்டத்தை விட்டு வெளியேறும்படி திமுகவினர் கூறியதாகவும் குற்றம்சாட்டினார். இதைத்தொடர்ந்து வெளியே வந்த ஜோதிமணி ’ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தன்னை வெளியேற சொல்வதுதான் திமுகவின் கூட்டணி தர்மமா? இது தான் திமுகவில் பெண்களுக்கு தரும் மரியாதையா?’ என ஆவேசமாக குரல் எழுப்பினார்.