விருதுநகரில் ஆட்டோவில் தவறவிட்ட 25 சவரன் திருமண நகையை ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பளர் பாராட்டினார்.
விருதுநகர் பெரிய வள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பசாமி - முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களது மகளுக்கு விருதுநகர் ராமர் கோவிலில் இன்று காலை திருமணம் நடந்தது. மற்ற வைபவங்கள் அனைத்தும் விருதுநகர் கந்தசாமி ராஜம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், பெண்ணின் பெற்றோர் விருதுநகர் ராமர் கோவிலில் இருந்து மண்டபத்திற்குச் செல்ல அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி உள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் ராமர் அவர்களை திருமண மண்டபத்தில் இறக்கி விட்டு ஆர்.எஸ்.ஆர்.நகரில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று விட்டார்.
இதையடுத்து சுமார் 1மணி நேரம் கழித்து மீண்டும் மற்றொரு சவாரிக்காக வீட்டில் இருந்து ராமர் புறப்பட்டுள்ளார். அப்போது ஆட்டோவின் பின் சீட்டில் பேக் ஒன்று இருப்பதைக் கண்ட அவர், பேக்கை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில், நகைகள் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ராமர் திருமண மண்டபத்திற்குச் சென்றார். அங்கு நகையை தவறவிட்ட கவலையில் பெண்ணின் பெற்றோர்கள் கண்ணீருடன் நின்றிருந்தனர். இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர் ராமர் அவர்களிடம் நகை இருந்த பேக்கை வழங்கினார். அங்கிருந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் முன்னிலையில் நகைகள் சரிபார்க்கப்பட்டு பெண்ணின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆட்டோ ஓட்டுனரின் நேர்மை அனத்துத் தரப்பினர் பாராட்டினர். ஆட்டோ ஓட்டுனரின் நேர்மையான செயலைக் கண்டு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், ராமரை நேரில் வரவழைத்து பாராட்டி பாராட்டு சான்றிதல் மற்றும் பரிசு வழங்கி கௌரவித்தார்.