சசிகலா வசமுள்ளதாகக் கூறப்படும் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கையையும், பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையையும் கூட்டினால் அதிமுகவில் இருக்கும் மொத்தமுள்ள எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கையை விட இருவர் அதிகமாக இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏ-க்களின் பலம் 136 ஆக இருந்தது. ஜெயலலிதா மறைவையடுத்து எம்எல்ஏ-க்கள் பலம் 135 ஆக குறைந்தது.
இந்நிலையில்தான் சசிகலாவிற்கு எதிராக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
இதனையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் 131 எம்எல்ஏ-க்கள் பங்கேற்றதாக கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் இந்த கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ-க்கள் அனைவரும் மூன்று பேருந்துகளில் அழைத்துச்செல்லப்பட்டனர். அவர்கள் எங்கு அழைத்துச்செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர் போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை ஒவ்வொன்றாக அதிகரித்து வருகிறது. சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ., மாணிக்கம், கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி, ஊத்தங்கரை எம்எல்ஏ., மனோரஞ்சிதம், வாசுதேவநல்லூர் எம்எல்ஏ., மனோகரன், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ., எஸ்.பி.சண்முகநாதன் போன்றோர் அடுத்தடுத்து பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். தற்போதுவரை பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கும் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 5-ஆக உள்ளது.
சசிகலா கூட்டிய அதிமுக-வின் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் 131 எம்எல்ஏ-க்கள் பங்கேற்றிருந்ததாக செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் பேருந்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை தற்போது முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்கள் 5-ஆக உள்ளது. செங்கோட்டையன் கூறியது படி பார்த்தால் 131 எம்எல்ஏ-க்களையும், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள 5 எம்எல்ஏ-க்களையும் கூட்டினால் எண்ணிக்கை 136 உள்ளது. ஆனால், ஜெயலலிதாவை தவிர்த்து மொத்தமாகவே 135 எம்எல்ஏ-க்கள் தான் அதிமுக-வில் உள்ளனர். அதிலும் ஓ.பன்னீர்செல்வத்தை விடுத்தால் எண்ணிக்கை 134 மட்டுமே. அப்படிப்பார்த்தால் 131 எம்எல்ஏ-க்கள் பங்கேற்றதாக செங்கோட்டையன் கூறிய கணக்கில் 2 எம்.எல்.ஏக்கள் குறைவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
குறைந்தபட்சம் 18 எம்எல்ஏக்களின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்திற்கு கிடைத்தாலும், ஆளும் அதிமுக பெரும்பான்மையை இழந்துவிடும் வாய்ப்பு உள்ளது.