தமிழ்நாடு

கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் தளத்தால் நீர் வளம் பாதிப்பா? : விளக்கம் கேட்கும் நீதிமன்றம்

webteam

கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைப்பதை நிறுத்தக் கோரிய வழக்கில் தமிழ்நாடு நீர்வள ஆதார திட்ட இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைப்பதால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. 148.43 கி.மீ நீளமுடைய கல்லணைக் கால்வாய் மூலம் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 2.27 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இந்நிலையில் ரூ.2,639.15 கோடி மதிப்பீட்டில் கல்லணைக் கால்வாய் புனரமைப்பு பணி தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றது. ஆண்டுக்கு 6 மாதங்களில் நீர்வரத்தை கொண்டுள்ள  இக்கால்வாய், நீர்வரத்து அல்லாத மீதமுள்ள மாதங்களில், அப்பகுதியிலுள்ள கிணறு, ஆழ்துளை கிணறுகள் மூலம் விவசாய மற்றும் குடிநீர் தேவைக்கான நிலத்தடி நீரை வழங்கி வருகிறது. 

ஆனால், தற்போது மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணியில் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்படுவதால், நீர் பூமிக்குள் செல்ல வாய்ப்பில்லை, இதன் மூலம் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, தஞ்சாவூர் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. கால்வாயில் கான்கிரீட் தளத்தின் அளவு உயர்த்தப்படுவதால், முழு கொள்ளளவான 4,200 கனஅடி நீர் கால்வாயில் செல்ல முடியாது. இதனால், வெள்ளத்தைத் தாங்கும் திறன் இல்லாமல் உடைப்பு ஏற்படும். எனவே, கல்லணைக் கால்வாயில் தற்போது 20 சதவீத பணிகள் முடிந்து விட்ட நிலையில், மீதமுள்ள பகுதிகளில் , தரைதளத்தில் கான்கிரீட் தளம் அமைக்காமல் , கரைகளின் பக்கவாட்டு பகுதிகள், பாலங்கள், படித்துறைகளை கான்கிரீட் கட்டுமானத்தால் பலப்படுத்தி, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பாசனத்துக்கு முறையாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், கான்கிரீட் தளம் அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் கான்கிரீட் தளங்களின் இடையே நீர் செல்வதற்கான குழாய்கள் அமைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு குறித்து தமிழ்நாடு நீர்வள ஆதார திட்ட இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.