தமிழ்நாடு

ஆர்டிஓ அலுவலகங்களில் கட்டாய சிசிடிவி கேமரா: தமிழக அரசுக்கு உத்தரவு

ஆர்டிஓ அலுவலகங்களில் கட்டாய சிசிடிவி கேமரா: தமிழக அரசுக்கு உத்தரவு

Rasus

லஞ்சப் புகார் எழுவதைத் தடுக்கும் வகையில் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வில் ஹெச் டிராக் எனப்படும் எலக்ட்ரானிக் முறையை ரத்து செய்யக்கோரி தென்னிந்திய ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சண்முகம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் மனுவை நிராகரிக்க தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காலத்திற்கு ஏற்ப தொழில் நுட்ப வளர்ச்சி முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். எலக்ட்ரானிக் முறை பாதுகாப்பானது மட்டுமல்லாமல் ஊழலை கட்டுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். மேலும், அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களும் மூன்று மாதத்தில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என தமிழக அரசுக்கும், போக்குவரத்துறை ஆணையருக்கும் நீதிபதி உத்தரவிட்டார். 24 மணிநேரமும் சிசிடிவி செயல்பட வேண்டும், தவறும் பட்சத்தில் ஆர்டிஓ தான் அதற்கு பொறுப்பாவார் என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஆர்டிஓ அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தும் வகையில் சிறப்பு படைகளை உருவாக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆர்டிஓக்கள் பணியில் சேர்ந்த காலத்தின் சொத்து விவரங்களையும், தற்போதுள்ள சொத்து விவரங்களையும் ஒப்பிட்டு அதில் முறைகேடு இருப்பது தெரியவந்தால் உடனே நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பின்னர் மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு நீதிபதி ஒத்திவைத்து அன்றைய தினம் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார்.