மண் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த புகாரில் ஈரோடு மாவட்ட ஆவின் பொதுமேலாளர் முருகேசன் உள்ளிட்ட 19 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு ராணிப்பேட்டை அருகே மண் கடத்தப்படுவதாக வெளியான புகாரில் அப்போதைய துணை ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பலர் தப்பி ஓடிய நிலையில் மண் கடத்தும் பணியில் ஈடுபட்ட ஜேசிபி வாகனத்தின் ஓட்டுநர் மட்டும் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய சரவணன் என்பவர் விட்டுச்சென்ற செல்போனுக்கு வந்த அழைப்புகள் மற்றும் வாட்சப் தகவல்களை பரிசோதித்ததில் அவருடன் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருக்கு நேரடி தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியராக இருந்து ஈரோடு மாவட்ட ஆவின் பொது மேலாளராக மாற்றப்பட்ட முருகேசனுக்கு மண் கடத்தல் கும்பல் நபர் சரவணன் பணம் தந்ததும் கார் வாங்கித் தந்ததும் தெரியவந்தது. இது தவிர மேலும் பல வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளும் சரவணன் மண் கடத்தலில் ஈடுபட உதவியது உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மண் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி 19 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஈரோடு ஆவின் பொதுமேலாளர் முருகேசன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.