விஷால் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என்று காஞ்சிபுரம் - திருவள்ளுர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் புகார் கூறியுள்ளனர்.
காஞ்சிபுரம் - திருவள்ளுர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களின் அவசர பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த சங்கத்தின் தலைவர் கண்ணப்பன் கூறும்போது, ’திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்தால் அதற்கு ரூ.30 அதிகமாக வசூலிக்கிறார்கள். அதனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புதிதாக இணையதளம் ஒன்று தொடங்கி ரூ.10 வசூலிக்கப் போவதாக விஷால் கூறியிருக்கிறார். திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது. இனிவரும் காலங்களில் விகிதாசார அடிப்படையில் திரைப்படங்களை திரையிடுவது என முடிவு செய்துள்ளோம். விநியோகஸ்தர்கள் அதிக விலை கொடுத்து படங்களை வாங்கிவிட்டு எங்களிடம் எம்.ஜி (மினிமம் கேரண்டி) முறையில் படத்தை திரையிடும் முறையை இனிமேல் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ளோம்’ என்றார்.