மேட்டூர் அருகேயுள்ள ஜலகண்டேசுவரர் கோயிலுக்குச் சொந்தமான மூலவர் லிங்கத்தை திருடியதாக, நித்யானந்தா மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியான பன்னவாடி கிராமத்தில், சோழ மன்னர் காலத்தில் ஜலகண்டேசுவரர் கோயில் கட்டப்பட்டது. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலில், பூஜை செய்வதற்காக 14 நாயன்மார்கள் பணி அமர்த்தப்பட்டிருந்ததாக குறிப்புகள் உள்ளன.
1924-ஆம் ஆண்டு சீதா மலைக்கும், பால மலைக்கும் இடையே மேட்டூரில் அணை கட்ட முடிவு செய்யப்பட்டபோது, அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேறு பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அணை கட்டினால், அப்பகுதி நீரில் மூழ்விடும் என்பதால், பாலவாடி என்ற இடத்தில் மற்றொரு கோயிலை கிராம மக்கள் கட்டிக் கொண்டனர். மூலவர் லிங்கம், ஐம்பொன் சிலைகள் உள்ளிட்டவற்றை பன்னவாடி கோயிலில் இருந்து எடுத்துவந்து பாலவாடியில் உள்ள கோயிலில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
(புகார் கொடுத்தவரில் ஒருவர்)
இந்தக் கோயில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை பெங்களூருவில் சொற்பொழிவாற்றிய நித்யானந்தா, புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார். முந்தைய ஜென்மத்தில் தாம்தான் ஜலகண்டேசுவரர் ஆலயத்தை கட்டியதாகக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதோடு நிற்காமல், அந்தக் கோயிலின் மூலவர் சிலையும் தன்னிடம் இருப்பதாக கூறியதுதான், புதிய பிரச்னைக்கு காரணமாக அமைந்துள்ளது.
நித்யானந்தா பேசிய வீடியோவை இணையதளத்தின் மூலமாக பார்த்த பாலவாடி கிராம மக்கள், மூலவர் லிங்கத்தின் கதையைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக கொளத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள அவர்கள், நித்யானந்தாவிடம் உள்ள மூலவர் லிங்கத்தை மீட்டுத் தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். சூரியனை தாமதமாக உதிக்க வைத்தேன், விலங்குகளை பேச வைப்பேன் எனக்கூறி திகைப்பை ஏற்படுத்திய நித்யானந்தா, ஜலகண்டேசுவரர் ஆலயத்தை முந்தைய ஜென்மத்தில் தாம்தான் கட்டியதாகப் பேசி புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார்